ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ்ஸிடம் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் விசாரணை நடத்துகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதற்கிடையில், மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது.
இதனை தொடர்ந்து, விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். முடிவில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் 21ம் தேதி நேரில் ஆஜராக பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.