திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்… பக்தர்கள் அதிர்ச்சி…!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு திருவிழா நாட்கள், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகாமையில் உள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா சமிபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
ஆவணி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி வருகின்றனர். அந்த சமயத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த ஜெல்லி மீன் பட்டதில் தோல் அலர்ஜி மற்றும் ஊறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்த போது பணியாளர்கள் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் கரை ஒதுங்கியதை கண்டறிந்தனர்.
இந்த வகை மீன்கள் தமிழ் மாதம் பங்குனி, ஆவணி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கடற்கரையில் காணப்படும். கண்ணாடி போன்று மீன்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால் அதிக விஷத்தன்மை கொண்டதாகும். இவ்வகை மீன் உடலில் பட்டதும் ஊறல் ஏற்படுகிறது. சில சமயம் ஊறல் ஏற்படுவதோடு தோல் உரிந்து விடுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் கவனமாக இருக்குமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்