நீதிபதி சுவாமிநாதனை விமர்சித்த நீதிபதி ஜெயச்சந்திரன்..! வெளியிடப்பட்ட கருத்து..! பரபரப்பான நீதிமன்றம்..!
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தற்போது மீண்டும் கோப முகம் காட்டியுள்ளார்.
இந்த நீதிமன்றம் ஒரு போதும் சாதியை பார்க்காது, நீங்கள் உடல் மீது நகை அணிந்துள்ளீர்கள் அல்லது நீங்கள் பிரமகஸ்தரா என்பதையும் பார்க்காது என நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாடு முழுவுவதும் தீயாக பரவி வரும் வழக்குகளில் சவுக்கு சங்கரின் வழக்கும் ஒன்று. பெண் காவலர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரின் பேரில் சவுக்கு சங்கரை காவலர்கள் கைது செய்தனர்.
அதன் பின், அவர் மீது கஞ்சா வழக்கு உட்பட குண்டர் சட்டமும் பாய்ந்தது. தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசிய காரணத்தால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றம்சாட்டுகளை பதிவிட்டனர்.
இதனிடையே, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாய் கமலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், உடனடியாக சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் சில அதிகாரமிக்க நபர்கள் தன்னோடு பேசியதாகவும், அவர்களின் எண்ணம் ஈடேறக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை உடனடியாக விசாரித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதே அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி பாலாஜி, அந்த மனு தொடர்பாக காவல்துறையினர் பதிலளிக்க கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
இவ்வாறு இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான ஜெயச்சந்திரனுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சவுக்கு சங்கர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.
“சட்டப் புத்தகத்தின் முதல் பாடமே AUDI ALTERAM PARTEM தான். அதாவது, எதிர் தரப்பையும் முறையாக விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வார்த்தைகள் தான் அது. ஆனால், அதை கூட கடைப்பிடிக்காமல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்” என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமல்லாமல், சவுக்கு சங்கர் வழக்கில் அரசு தரப்புக்கு போதிய கால அவகாசம் அளிக்காமலும், தனது பெஞ்ச் பார்ட்னரை (நீதிபதி பாலாஜி) கலந்தாலோசிக்காமலும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், அவசர அவசரமாக உத்தரவுகளை பிறப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதன் மூலமாக மாநில காவல்துறைக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பாரபட்சம் காட்டியுள்ளார் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன். ஒரு நீதிபதிக்கு எதிராக மற்றொரு நீதிபதியே இவ்வாறு கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றொரு காட்டமான கருத்தையும் தற்போது தெரிவித்துள்ளார். அதில், “சில நீதிபதிகள் எப்படி வேண்டுமானாலும் உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். அதே சமயத்தில், வழக்கறிஞர்களும் அதுபோன்ற நீதிபதிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால், இந்த நீதிமன்றம் அனைவருக்கும் சமமானது. அது அடுத்தவர்களின் சாதியையோ, அதன் பெருமையையோ அல்லது அவர்கள் உடலில் என்ன அணிந்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்காது” என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெ.லோகேஸ்வரி