கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதற்கான விண்ணப்ப பதிவுகள் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. ஆகஸ்ட் 20ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற வேண்டியதிருப்பதால், விண்ணப்பங்களை சரி பார்த்தல், தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தல், கள ஆய்வு எடுத்தல், தகுதியானவர்கள் யாரும் விடுபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் என பல பணிகள் உள்ளன.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வராதவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் இந்த 3 நாள் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் நிலையில், அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்பட இருக்கும் நிலையில், இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.