கமுதியில் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி களிமண் மனிதர்கள் (சேத்தாண்டி) நகர்வலம் கமுதியில் வித்தியாசமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 26_ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான இன்று அக்கினிச்சட்டி, தீக்குண்டம் இறங்குதல் நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சேத்தாண்டி பக்தர்கள் அதிகாலை முதல் களிமண் சேறு பூசி களிமண் மனிதர்களாகவே மாறி கமுதியை நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வெயிலின் தாக்கம் எப்போதும் அதிகமாக இருக்கும் உடல் சூடு மற்றும் தோல் வியாதிகளை குறைக்க அந்தக் காலத்திலேயே உடல் முழுவதும் களிமண் சேறு பூசி சேத்தாண்டி திருவிழா என்பது காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 22 நாள் விரதம் இருந்த பக்தர்கள் கமுதியில் உள்ள ஊரணி கரையில் உள்ள களிமண் சேற்றைக் குழைத்து தலை முதல் கால் வரை அடையாளம் தெரியாத அளவிற்கு பூசி கமுதி முழுவதும் உள்ள கோவில்களுக்கு மேள தாளங்களோடு சென்று இறுதியில் முத்துமாரியம்மன் கோவில் சென்று வழிபட்டு செல்கின்றனர்.
களிமண் இயற்கையாகவே குளிர்ச்சியானது என்பதால் அதை உடலில் பூசினால் உடல் குளிர்ச்சி பெறும் என்பதால் கமுதி சுற்றுவட்டார பகுதி மக்கள் களிமண் சேறு பூசி ஒரு மணி நேரம் நகர்வலம் வருவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் முத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக சேத்தாண்டி வேஷம் போடத் தொடங்கினர்.
முன்பெல்லாம் களிமண்ணால் கட்டப்பட்ட வீடுகளில் வசித்த மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது காங்கிரீட் வீடுகளில் வெப்பம் தாங்க முடியாமல் ஏர் கண்டிஷன் போட்டு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை மாறியதால் மனிதர்களும் மாறி விட்டனர்.
களிமண் குளிர்ச்சியானது என்பதால் கோடைகாலத்தில் வரும் வேர்க்குரு, வேனல்கட்டி, அம்மை போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்கவும்,களி மண்ணுக்கு இயற்கையாகவே நீரை உறிஞ்சும் குணம் இருப்பதால் உடலில் பூசும்போது வியர்வை வரும் வியர்வை கண் அடைப்புகள் நீங்கி வியர்வை வெளியேறுவதால் உடல் குளிர்ச்சியாகும்.
இந்த ஆண்டு கமுதி மற்றும் வெளியூர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேத்தாண்டி வேடம் இட்டு கமுதி முழுவதும் களிமண் மனிதர்களாகவே காட்சியளித்தனர்.
வெளிநாடுகளில் களிமண் குளியல் தற்போது பிரபலம் ஆகி வரும் நிலையில்.. கமுதியில் களிமண் குளியல் உடலுக்கு நல்லது, உடல் சூட்டை தணிக்கும் என்பதை முத்துமாரியம்மனுக்கு வேண்டுதல் என ஆக்கி 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சேத்தாண்டி வேடம் இட்ட தமிழர்கள் காலத்தை கணிக்க கூடியவர்கள் தான் என்பதை நிரூபித்துள்ளது.