வீட்டின் உரிமையாளர் செய்த செயலால் பரப்பான காஞ்சிபுரம்…பறித்தவித்த வாடகைதாரர்..!
காஞ்சிபுரம் விளக்கடி பெருமாள் கோவில் தெருவில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் வேணுகோபால் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
கூலி தொழிலாளியாக வேலை செய்து வரும் வேணுகோபாலுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்.
இதனால் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக வீட்டின் வாடகை பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் வீட்டை காலி செய்யுமாறு வேணுகோபாலிடம் கூறியிருக்கிறார்.
வேணுகோபால் வீட்டை காலி செய்யாமல் வக்கீல் மூலம், வீட்டின் உரிமையாளர் சீனிவாசனுக்கு வாடகை செலுத்த காலஅவகாசம் தருமாறு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.
ஆனாலும் சொன்னபடி வேணுகோபால் வாடகை செலுத்தாமல் இருந்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் தகராறில் ஈடுப்பட்டத்துடன் நேற்று மாடி வீட்டுக்கு செல்லும் படிக்கட்டை ஜேசிபியை வைத்து தரைமட்டமாக இடித்துவிட்டார்.
இதனால் வேணுகோபால் குடும்பத்தினர் மாடியில் இருந்து கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பையும் துண்டித்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வேணுக்கோபால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் நேரில் வந்த பார்த்ததுடன், உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாடி வீட்டில் இருந்த வேணுக்கோபல் மற்றும் அவரது குடும்பத்தினரை பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
வீட்டின் உரிமையாளர் சினிவாசனின் இச்செயலால் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்