கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து .60 டன் இரும்பு பைப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு கோடி திட்ட மதிப்பில் டெண்டர் விடப்பட்டு ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் 6- ஆம் தேதி துவங்கியது.
இப்பணிகள் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் முடித்து 2-ஆம் தேதி முதல், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று, மழை போன்றவற்றால் திட்டமிட்டவாறு பணிகளை முடிக்க முடியவில்லை. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து, சுமார் 85 டன் இரும்பு கம்பிகளால் 140 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சாரம் அகற்றும் பணிகள் துவங்கியுள்ளது. இருப்பினும் கடலில் காற்று அதிகமாக வீசுவதால் உயரத்தில் இருந்து கம்பிகள் இறக்குவதில் சிரமம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்க வாய்ப்புள்ளதால், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.