தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் இலவசங்களை அறிவித்து மக்களை கெடுத்துவிட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நெட்டிசன்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் பால் முதல் கேஸ் சிலிண்டர் வரை பாஜக இலவசங்களை அள்ளி தெளித்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் “தமிழகத்தில் வந்தால் தக்காளி சட்னி…. உங்களுக்கு வந்தா ரத்தமா? ” என பாஜக செம்ம கலாய் கலாய்த்து வருகின்றனர்.
கர்நாடகா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதில்,
- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ
(5 கிலோ அரிசி + 5 கிலோ தினை) இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தீபாவளி, உகாதி மற்றும் விநாயகர் பண்டிகைக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என்றும், காசி மற்றும் கேதார்நாத் புனித யாத்திரைக்காக ஏழை மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கர்நாடகா முழுவதும் உள்ள முக்கிய கோவில்களை பராமரிப்புக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.