கர்நாடக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சித்தராமையா மற்றும் அவரது துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் காங்கிரஸ் தலைமையால் முடிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து முதல்வராக பதவியேற்க உள்ள சித்தராமையா ஆளுநரைச் சந்தித்து அரசு அமைக்க உரிமை கோரினார்.
அதன் தொடர்ச்சியாக இன்று பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு சில அமைச்சர்களுடன் சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்க உள்ளனர். இதனையடுத்து பெங்களூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழாவை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டிரவா மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடக அமைச்சரவையில் டாக்டர் ஜி பரமேஸ்வரா, கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்பி பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி மற்றும் பிஇசட் ஜமீர் அகமது கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.