“அனைவருக்காகவும் உழைப்பேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்று கொண்டஅரவிந்த் கெஜ்ரிவால், கட்சி சார்பின்றி அனைத்து மக்களுக்காகவும் உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மை பெற்றது. 8 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. தேர்தல் முடிவு வெளியான பின்னர், டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்று கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று (பிப்-16) பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து டெல்லி துணை முதலமைச்சராக மணீஷ் சிசோடியா பதவியேற்றார். அவர்களை தொடர்ந்து, 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதன் பின்னர் முதலமைச்சராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

அப்போது அவர், தேர்தலில் சிலர் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர், சிலர் பா.ஜ.க.விற்கும், இன்னும் சிலர் காங்கிரஸ்க்கும் வாக்களித்தனர். ஆனால், டெல்லி முதலமைச்சராக எப்பொழுது பதவியேற்று கொண்டேனோ, அதிலிருந்து அனைவருக்கும் உரிய முதலமைச்சராக நான் இருக்கிறேன். நான் ஆம் ஆத்மியின் முதலமைச்சர், பா.ஜ.க.வின் முதலமைச்சர், காங்கிரசின் முதலமைச்சர், பிற கட்சிகளின் முதலமைச்சராக இருக்கிறேன். கட்சிகளுடனான தொடர்பு, ஒவ்வொருவருக்காகவும் நான் பணியாற்றுவதில் இருந்து என்னை தடுத்து நிறுத்தவில்லை. கட்சி சார்பின்றி அனைவருக்காகவும் உழைப்பேன் என்று கெஜ்ரிவால் கூறினார்.

What do you think?

ஜப்பான் கப்பலில் 3 இந்தியர்களுக்கு கொரோனா; மொத்தம் 355 பேர் பாதிப்பு

காஷ்மீர் குறித்து அமெரிக்கா கவலைப்பட வேண்டாம் – ஜெய்சங்கர்