12 வயது சிறுவன் கடத்தல்..! உடந்தையாக இருந்த போலீஸ்..! பரபரப்பான மதுரை..!
மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜ்குமார் – மைதிலி ராஜலட்சுமி. இவர்களின் மகன், கீழமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ராஜ்குமார் அதிக கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மைதிலி ராஜலட்சுமி தனது மகன் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் மைதிலியின் மகன் பள்ளிக்கு தினமும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி என்பவரின் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வழக்கம் போல் ஆட்டோ ஓட்டுநருடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஆம்னி வேனில் ஆட்டோவை இடித்து தள்ளியது.
இதில் கீழே விழுந்த ஆட்டோ ஓட்டுனரையும் பள்ளி மாணவனையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி கண்களை கட்டி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை அருகே அந்த கடத்தல் கும்பல் ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் மூலமாக கடத்தப்பட்ட மாணவனின் தாயான மைதிலி ராஜலட்சுமிக்கு போன் மூலம் அழைப்பு விடுத்து தாங்கள் சிறுவனை கடத்தி உள்ளதாகவும், சிறுவனை விடுவிக்க வேண்டுமானால் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் வீடியோ கால் மூலம் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறுவனை காட்டி பேரம் பேசி இறுதியில் இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், ”பேசியபடி பணத்தை தரவில்லை என்றாலும் போலீசில் புகார் அளித்தாலும் சிறுவனை வெட்டி வீசி விடுவோம் என்றும் நான்கு நாட்களுக்கு பிறகு உனது மகன் சடலமாக சாலையில் கிடப்பான்” என கூறியுள்ளனர். இது தொடர்பான ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை அடுத்து அந்த ஆடியோவுடன் மைதிலி ராஜலட்சுமி இதுகுறித்து எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் எண்ணை வைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் காவல்துறையினர் தங்களை தொடர்வதை உணர்ந்த கடத்தல் கும்பல் சிறுவனையும் ஆட்டோ ஓட்டுனரையும் செக்கானூரணி அருகே காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டு தப்பி ஓடினர்.
இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ”மைதிலியின் கணவர் பெண் ஒருவரிடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வணிக வளாகம் வாங்கியதாகவும் அந்த பணத்தை திருப்பி தராமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட பெண் பணத்தை பெறுவதற்காக காவல்துறையில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்குமார் என்பவரை அனுகியதாகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஒருவருடன் இணைந்து இந்த கடத்தல் சம்பவத்தில்” ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன்படி செந்தில்குமாரை கைது செய்த போலீசார் அவர் மூலமாக தலைமறைவான கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும் கொலைக்கு திட்டமிட்ட பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தல் சம்பவத்தில் போலீசார் ஒருவர் உடந்தையாக இருந்தது அப்பகுதி மக்களுக்கும் எஸ்எஸ் காலனி போலீசாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்