இந்தியாவின் பாரம்பரியம் மிக்க, விலையுயர்ந்த கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் கையகப்படுத்தியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இந்த வைரத்தை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது. ஆனால் இங்கிலாந்து அரசு அதனை திரும்ப வழங்க முடியாது என மறுத்துவிட்டது.
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை கோஹினூர் வைரம் இதுவரை அலங்கரித்து வந்தது.
கோஹினூர் வைரத்தின் எடை, விலை:
இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததாகும்.
கிழக்கிந்திய கம்பெனியால் அபகரிக்கப்பட்டு, விக்டோரியா மகாராணியின் கிரீடத்தில் பொருத்தப்படுவதற்கு முன்பு, கோஹினூர் வைரத்தின் எடை சுமார் 186 பழைய காரட்கள் (191 மெட்ரிக் காரட் அல்லது 38.2 கிராம்) ஆகும்.
இந்த வைரத்தில் எடையும், அளவும் தான் அதனை உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரமாக மாற்றியுள்ளது. கோஹினூர் வைரத்தின் தற்போதை விலை 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 1.64 லட்சம் கோடியாகும்.
சர்ச்சைக்குரிய வரலாறு:
உலகின் மிக விலையுயர்ந்த வைரமான கோஹினூரின் சொந்த ஊர் இந்தியாவின் பஞ்சாப் ஆகும். இந்த வைரமானது சீக்கிய மன்னரான மகாராஜா துலீப் சிங்கிற்கு சொந்தமானது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கிழக்கிந்திய கம்பெனி பஞ்சாபை இணைத்து, விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த பிறகு, கோஹினூர் வைரம் ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டது.
விக்டோரியா மகாராணி ஒரு வட்ட வடிவ ப்ரூச்சில் வைரத்தை அணிந்தார், அதன் பிறகு அது ராணி அலெக்ஸாண்ட்ராவின் கிரீடத்தில் பொருத்தப்பட்டது, இறுதியில் வைரம் எலிசபெத் ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டது.
இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் மரணமடைந்த நிலையில், அடுத்த ராணியான கமீலா கோஹினூர் வைரத்தால் ஆன கிரீடத்தை அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்ச்சையான வரலாறு காரணமாக அந்த வைர கிரீடத்தை அணிய கமீலா அணிய மறுத்தது குறிப்பிடத்தக்கது.