வைகோவின் கோரிக்கைக்கு சட்ட அமைச்சர் விளக்கம்

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ விடுத்திருந்த கோரிக்கைக்கு, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

வைகோவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிப்ரவரி 12-ஆம் தேதியன்று வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 27.11.2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் சுழிய நேரத்தில், உச்சநீதிமன்றக் கிளையை, சென்னையில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தீர்கள். அதுகுறித்து சில கருத்துகளைத் தெரிவிக்க விழைகின்றேன்.

அரசு அமைப்புச் சட்டத்தின் 130-வது பிரிவின்படி, உச்சநீதிமன்ற அமர்வு தில்லியில் நடைபெறலாம் அல்லது காலத்திற்கு ஏற்ற வகையில் தலைமை நீதிபதி தீர்மானிக்கின்ற, குடியரசுத் தலைவர் இசைவு அளிக்கின்ற வேறு இடங்களிலும் நடைபெறலாம்.

ரவிசங்கர் பிரசாத்

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து, உச்சநீதிமன்றக் கிளையை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. சட்ட ஆணையத்தின் 229-வது அறிக்கையின்படி உச்சநீதிமன்றத்தின் சுற்று அமர்வுகள் (Cassation Benches), வடபகுதிகளுக்காக தில்லியிலும், தெற்குப் பகுதிக்கு சென்னை, ஹைதராபாத், கிழக்கில் கொல்கத்தா, மேற்கில் மும்பை ஆகிய இடங்களிலும் நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அதற்கு உச்சநீதிமன்றம் இசைவு அளிக்கவில்லை;

பல்வேறு காலகட்டங்களில் நடுவண் அரசு வழக்குரைஞர்களிடம் (அட்டர்னி ஜெனரல்) கருத்துகள் கேட்கப்பட்டபோது, அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 36/2016 ரிட் மனு, தேசிய மேல் முறையீட்டு நீதிமன்றம் (National Court of Appeal) அமைக்க நீதிப் பேராணை கோரிய வழக்கில், 13.07.2016 அன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இந்தப் பிரச்சினையை அரசு அமைப்பு சட்ட அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரை செய்து இருக்கின்றது. அந்த வழக்கு, தற்போது உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

What do you think?

சிசிடிவி கேமரா உதவியுடன் கொள்ளையர்கள் கைது!

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; அழியும் பேனா தயாரித்தவர் கைது!