அண்ணாமலை கூறிய அண்ணா தேவர் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதற்கான உணமை நிலையை ஆராய்ந்து பார்க்கலாம்.
செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக சாடியதாகவும் மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்ததாகவும் அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், அதிமுக பாஜக இடையே மீண்டும் மோதல் உண்டாகி கூட்டணி முறிப்பு வரை சென்றது. இந்நிலையில் தொடர்ந்து இதற்கு ஆதாரம் என்ன என அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தி இந்து ஆங்கில நாளிதழில் 1956 ஜீன் மாதம் 1 முதல் 4 ஆம் தேதியில் உள்ள பத்திரிக்கைகளை ஆராய்ந்துப் பாருங்கள் உண்மை வெளிவரும் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
அண்ணா பேசியிருந்தது:
1956 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தன. மேடையில் அண்ணாதுரையும், விழாத் தலைவரும், மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான பி டி ராஜன் அமர்ந்திருந்தார், அப்போது மணிமேகலை என்ற சிறுமி சங்க காலத்துப் பாடலை அழகாக பாடியுள்ளார். அவருக்கு அடுத்து பேசிய அறிஞர் அண்ணா சிறுமி சங்கப் பாடலை இனிமையாக பாடினாள். இதை பக்த சிரோன் மணிகள் கேட்டால் உமையம்பாள் புனிதப் பாலை குடித்துவிட்டு தான் அழகாக குழந்தை பாடியதாக கூறிவிடுவார்கள். நாம் இப்போது இப்படிப்பட்ட புரட்டுகளிலிருந்து மீண்டு பாடிபகுத்தறிவோடு செயல்பட தொடங்கி விட்டோம் என பேசியிருந்தார்.
தேவர் பேசியிருந்தது:
மறுநாளும் நிகழ்ச்சிகள் தொடர்ந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வேதனையுடன் வந்த தேவர், ஆலயத்தில் தெய்வ நிந்தனைப் பேச்சு நடந்தது நல்லதல்ல. அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் . இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது விழாவைத் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றிவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தேவரின் கருத்தை பிடிஆர் ஏற்காத நிலையில் விழாவில் அவரவர் கருத்துகளை அவரவர் சொல்வதற்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார். உடனே ஒலிப்பெருக்கி முன் வந்த தேவர் எக்காரணத்தைக் கொண்டும் ஆலயத்தில் யாரும் தெய்வ நிந்தனைப் பேச்சு பேசக்கூடாது, முதல்நாள் அண்ணாதுரை பேசியது பக்தர்களை புண்படுத்தி விட்டது. எனவே பொன்விழா நிகழ்ச்சிகளைத் தமுக்கம் மைதானத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மறுநாள் முதல் நிகழ்ச்சிகள் தமுக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டன என அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அறிஞர் அண்ணாவுக்கும், பசும்பொன் தேவருக்கும் கருத்து முரண் ஏற்பட்டது உண்மை. ஆனால், பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று பேசியதாக கூறுவதில் உண்மையில்லை, மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவந்த கும்பல் என்று அண்ணாமலை பேசியதும் நடக்கவில்லை.