கர்ப்பிணி பெண் சாப்பிட்ட வடையில் பல்லி..!! சிக்கிய மயிலாடுதுறை உணவகம்..!!
மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட்ட வடையில் பல்லி வெந்து போய் கருகி இருந்ததால் அதிர்ச்சி. தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்சிகிச்சை. மயிலாடுதுறை காவல் நிலையம் உணவு பாதுகாப்பு துறையில் புகார். நகராட்சி உணவு பாதுகாப்பு துறை உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கி பதிலளிக்க உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடியை சேர்ந்தவர் செல்வம். இவர் இன்று 8 மாத கர்ப்பிணியான தனது மகள் செல்வ லட்சுமியை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக இன்று காலை மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
தனது மகள் சாப்பிட வேண்டும் என்று கூறியதால் பூம்புகார் சாலையில் உள்ள மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே இருக்கும் அம்பி மெஸ் என்ற சைவ உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே செல்வலட்சுமி பொங்கல் வடை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
வடையை சாப்பிட்டபோது அதில் பல்லி ஒன்று வெந்து கருகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஹோட்டல் நிர்வாகியிடம் கூறவே, அதற்கு ஹோட்டல் நிர்வாகி வேகமாக வந்து கருவேப்பிலை ஏதாவது கிடக்கும், என்று சொல்லிவிட்டு, கர்ப்பிணி பெண்ணின் இலையில் இருந்த வடையை பிடுங்கி தூக்கி எறிந்துள்ளார்.
வாசலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் தந்தை செல்வம், சத்தம் கேட்டு அங்கு வந்து மகளிடம் விசாரித்துள்ளார், கர்ப்பிணி பெண் நடந்ததை கூற உடனே மகளை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு கர்ப்பிணி பெண் நலமுடன் வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்பு துறையினரிடம் செல்வம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பெயரில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் விளக்கம் கேட்டு பதில் அளிக்க உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் உயர்தர சைவ உணவகத்தில் கரப்பான் பூச்சி கிடந்தது தற்போது போண்டாவில் பல்லி வெந்து கிடப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்வதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மயிலாடுதுறையில் உள்ள உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தி சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினர்.