‘கொரோனாவால் தடைப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு’ 26ம் தேதி வரை ம.பி சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 26ம் தேதி வரை மத்திய பிரதேச சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவரின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் பதவி விலகினர்.

இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆக குறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதயடுத்து மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் அம்மாநில முதல்வர் கமல்நாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில்,”மார்ச் 16-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் எனது உரையுடன் தொடங்கும். எனது உரை முடிந்ததும் நீங்கள் பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்றும் இந்த நடைமுறைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில் மத்திய பிரதேச சட்டப்பேரவை இன்று கூடியது. அதில் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். அதில் பலர் கொரோனா வைரஸ் பீதி காரணமாக முககவசம் அணிந்து வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 26ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

‘திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை’ பொதுமக்கள் அதிர்ச்சி!