கேஎஃப்சி சிக்கனில் மெக்னீசியம் சிலிகேட்-சிந்தடிக்… உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை..!
தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டு நிறுவனமான கேஎஃப்சி சிக்கன் உணவகம் செயல்பட்டு வருகின்றது.
அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.மாரியப்பன் அவர்கள் தலைமையில், சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வின் போது, உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிகேட்-சிந்தடிக் என்ற உணவு சேர்மத்தை, ஏற்கனவே பயன்படுத்தி மீதமாகி அப்புறப்படுத்த வேண்டிய பழைய உணவு எண்ணெயைத் தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிகேட் ரசாயனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு சமைக்க முடியாத கெட்டுப்போன 45 லிட்டர் பழைய எண்ணை, 12 மணி நேரத்துக்கு மேலாக பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்தும் உணவகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக அதிகாரிகள் ரத்து செய்தனர். மறு உத்தரவு வரும் வரை உணவகத்தை திறக்கக் கூடாது எனவும் மீறும்பட்சத்தில், வளாகம் மூடி சீலிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தெட்டிக் மற்றும் அதைப் பயன்படுத்தி, தூய்மைப்படுத்தப்பட்ட பழைய உணவு எண்ணெய் ஆகியவற்றிலிருந்து, உணவு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, தொடர் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கேஎஃப்சி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்