சம்பிரதாயங்களை மீறிய மஹிந்த ராஜபக்ச!!! – கண்டுகொள்ளாத தேவஸ்தான அதிகாரிகள்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காலில் சாக்ஸுடன் சென்றது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை தேவஸ்தான அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை அவர் சென்றிருந்தார். தனது மகன் யோஷிதா ராஜபக்ச, இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட சிலருடன் திருப்பதிக்கு சென்ற அவர், அன்றிரவு திருமலையில் தங்கினார்.

நேற்று காலை விஐபி பிரேக் சமயத்தில் கோயிலுக்கு சென்ற மஹிந்த ராஜபக்சவிற்கு தேவஸ்தானத்தினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிராசதங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கிடையே ஏழுமலையான் கோயிலுக்குள் சென்ற மஹிந்த ராஜபக்சவும், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் காலில் சாக்ஸூடன் சென்று சுவாமியை தரிசித்தனர். ஏழுமலையான் கோயிலுக்குள் செல்லும் யாரும் காலில் சாக்ஸ் அணிவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தான அதிகாரிகளும், அவர்களுடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும் இதனை கண்டும் காணததும் போன்றே இருந்தனர்.

ஆனால், சம்பிரதாயங்களை மீறி காலில் சாக்ஸ் அணிந்தபடியே தரிசனம் செய்துவிட்டு, கோயிலுக்கு வெளியே வந்த மஹிந்த ராஜபக்சவை கண்ட பக்தர்கள் முகம் சுளித்தனர். மஹிந்த ரஜபக்சவின் இந்த செயலும், இதனை கண்டுகொள்ளாத தேவஸ்தான அதிகாரிகளின் செயலும் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

அரவிந்த் கெஜ்ரிவால் 3.O – தலைவர்கள் வாழ்த்து

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 1,110 ஆக அதிகரிப்பு!