2023-24ஆம் நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், இன்று வருமான வரி வரம்பு வரை சுங்கக்கட்டணம் வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1.வரி விலக்கு அதிகரிப்பு:
2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தொடர்பான மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும். முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. இப்போது புதிய வரி விதிப்பில் வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள ஊழியர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
புதிய வருமான வரி விதிப்பு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது இயல்புநிலை விருப்பமாக இருக்கும். வரி செலுத்துவோர் தாங்கள் விரும்பும் வரி முறையை தேர்வு செய்யும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
2. வரி அடுக்குகளில் மாற்றம்:
இந்த பட்ஜெட்டில் வரி அடுக்குகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட 6 விலக்குகள் தற்போது 5 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி உச்சவரம்பானது ரூ.2.50லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 0-ரூ.3லட்சம் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.
ரூ.3,00,001ல் இருந்து ரூ.6 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 5% வருமான வரி செலுத்த வேண்டும்.
ரூ.6,00,001ல் இருந்து ரூ. 9 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 10% வருமான வரி செலுத்த வேண்டும்.
ரூ.9,00,001ல் இருந்து ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 15% வரி செலுத்த வேண்டும்.
ரூ.12,00,001ல் இருந்து ரூ. 15,00,000 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 20 % வரி கட்ட வேண்டும்.
ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 30 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும்.
3. நிலையான விலக்கு நன்மை:
பழைய வரி முறையின் கீழ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூ. 50 ஆயிரம் நிலையான விலக்கில் எந்த மாற்றமும் இல்லை. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, புதிய வரி முறைக்கு நிலையான விலக்கு பலன்களை நீட்டிப்பதாக நிதியமைச்சர் அறிவித்தார். ரூ. 15.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ள ஒவ்வொரு சம்பளதாரர்களும் ரூ. 52,500 வரை பயனடைவார்கள்.
4. மூத்த குடிமக்கள் டெபாசிட் வரம்பு:
மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்டு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய முடிவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்திற்கு பதிலாக ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். மேலும் மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் (எம்ஐஎஸ்) முதலீடு செய்வதற்கான வரம்பு ரூ.4.5 லட்சத்துக்குப் பதிலாக ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கின் கீழ் ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5. இன்சூரன்ஸ் பாலிசிகள் மீதான வரி:
இதுவரை ஆயுள் காப்பீட்டு பாலிசியின் முதிர்வுத் தொகைக்கு வரி கிடையாது என்ற முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், ஏப்ரல் 1 க்குப் பிறகு வாங்கப்படும் காப்பீட்டு பாலிசி பிரீமியம் ரூ. 5 லட்சத்தைத் தாண்டினால் அந்தத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலிசிகள் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தாலும் வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
6. மியூச்சுவல் ஃபண்ட்:
ஏப்ரல் 1ம் தேதி முதல், கடன் மியூச்சல் ஃபண்ட்களில் நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகையையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும் முதலீட்டு வருமானத்தின் மீதான வரி அடுக்குகளின் படி, வரி செலுத்த வேண்டும். நிதி மசோதா 2023 திருத்தங்களில் மத்திய அரசு இதை முன்மொழிந்துள்ளது. தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடன் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால் அவை நீண்ட கால முதலீடுகளாகக் கருதப்படுவதோடு. எல்டிசிஜி வரி 20 சதவீதம் குறியீட்டுடன் சேர்த்து வரி விதிக்கப்படும்.
7. பொருட்களின் விலையில் மாற்றம்:
ஏப்ரல் 1ம் தேதி முதல் சில பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த பட்ஜெட்டில், சில பொருட்களின் மீதான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, இறக்குமதி பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றின் விலைகள் உயர உள்ளன. அதேசமயம் வைரம், பொம்மைகள், உடைகள், சைக்கிள்கள், டிவி, போன்கள், கேமரா லென்ஸ்கள் ஆகியவற்றின் விலை குறைய உள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகனங்களின் விலையும் உயர உள்ளது. பல உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்துவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. குறிப்பாக மாருதி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விலை உயர்வு பட்டியலில் உள்ளன. மேலும் வாகன புகை மாசு விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
8. பெண்களுக்கான சிறப்பு திட்டம்:
மத்திய அரசு பெண்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2025 வரை இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும். இது 7.50 சதவீத வட்டியை வழங்குகிறது. இதில் அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ. 2 லட்சம். இது தொடர்பான முழு விவரம் தெரிய வர உள்ளது.
9. சுங்கக்கட்டணம்:
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் டோல் கட்டணம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த முறை அது 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று NHAI – இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10. ஹால் மார்க் நகைகள்:
நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு HUID (ஹால்மார்க் தனித்துவ அடையாளம்) கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது இனி அனைத்து நகைக்கடைகளிலும் ஹால்மார்க் முத்திரை உள்ள தங்க நகைகளை மட்டுமே விற்க முடியும். ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.