காதலித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்த இருவர் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சந்தப்பேட்டை வனப்பகுதியில் நேற்று காலை தலை நசுக்கப்பட்டு, பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் இதனை கண்டதும் ஏரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் ஆண் சடலம் இருந்த இடத்திற்கு வந்த ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இதுகுறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். மகன் தினேஷ் வயது 28,அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் குணாளன் வயது 20 ஆகிய இருவரும் வழக்கறிஞர்களுடன் வந்து பெண்ணாகரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதில் கொலை செய்யப்பட்டவர் ஓசூர் கலவரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் வயது 45 என்பது தெரிய வந்தது,இவரும் தினேஷின் தந்தையான கோவிந்தராஜ் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் நீண்ட நாள் நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
இதனால் சசிகுமாருக்கும் தினேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சசிகுமார் மாந்திரீகம் செய்யும் வேலையையும் செய்து வந்துள்ளார்.
இதனால் தினேஷ் தனது நீண்ட நாள் தோழியை காதலியாக மாற்றி, திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்க வைக்க வேண்டும் என சசிகுமாரை நாடி உள்ளார். இதற்காக சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கூறியதால் தினேஷ் தனது தோழியை அழைத்து வந்துள்ளார்,அப்பொழுது தனிமையில் இருந்த அப்பெண்ணை சசிகுமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த தினேஷ் நண்பர்களுடன் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்யும் நோக்கில் தனது நண்பர் வீட்டிலும் மாந்திரீகம் செய்ய வேண்டும் என அழைத்து வந்து ஏரியூர் அருகே சந்தப்பேட்டை வனப்பகுதியில் மது ஊற்றி கொடுத்து கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தினேஷ் மற்றும் குணாளன் இருவரையும் பெண்ணாகரம் நீதிமன்ற நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பென்னாகரம் அருகே உள்ள பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திப் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.