ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க
ஆந்திர முதல்வருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவில் வசிக்கும் மகாலெட்சுமி மற்றும் மகாராஜா ஆகியோரின் மகன் திரு. ம. வெற்றி விசுவா என்பவர் சென்னையில் உள்ள SUCHNA MARINE SERVICES PVT LTD என்ற கப்பல் நிறுவனத்தில் DECK CADET ஆக பணிக்கு சேர்ந்து ஆந்திர மாநிலம், கிருஷ்ணபட்டணம் M.V. Penna Suraksha கப்பலில் பணி செய்து வந்துள்ளார்.
கடந்த 7.9.2023 அன்று இரவு 10 மணிக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் தங்களுடைய பெற்றோருடன் பேசிய வெற்றி விசுவா, மறுநாள் விடியற்காலை 4 மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பதால் தூங்கச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
8.9.2023 காலை கப்பல் நிறுவன மேலாளர், வெற்றி விசுவாவின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகன் வேலைக்கு வரவில்லை என்றும், கப்பல் முழுவதும் தேடியும் அவனைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.
வெற்றி விசுவாவின் பெற்றோர்கள் கப்பல் கேப்டனை தொடர்பு கொண்டு, தங்கள் மகனைப் பற்றி கேட்டதற்கு அலட்சியமாக பதிலளித்துள்ளார். தங்கள் மகன் குறித்து கவலை அடைந்துள்ள பெற்றோர், மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் திரு. வைகோ எம்.பி அவர்களிடம் தங்கள் மகனை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
திரு. வைகோ அவர்களும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அவசரக் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் ம.வெற்றி விசுவாவை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.