இந்திய நாட்டின் பெயரை united state of india என மாற்றியமைக்க முன்னரே நாடாளுமன்ற ராஜ்யசபையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது தற்போது கவனிக்கப்படுகிறது.
ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைப்பெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்தது. அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றன. மேலும் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியா பெயர் மாற்றம் குறித்து மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பிய நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வேளையில் தான் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ல் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்த வைகோ இந்திய நாட்டின் பெயர் குறித்து உரையாற்றினார்.
அப்போது பேசியது:
இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான். ஆனால், ‘இந்தியா ஒரே நாடு’ என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகின்றது. அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது. உண்மையில் இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என்றே அழைக்கப்பட வேண்டும். ஏற்கனவே போதிய சட்டங்கள் இருக்கின்ற நிலையில், கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் தேவையற்றது.
இந்திய மக்கள் அன்பானவர்கள். வன்முறையை விரும்பாதவர்கள். தங்கள் கருத்துகளை தேர்தல் வாக்குப் பதிவின் மூலமே வெளிப்படுத்த விரும்புகின்றவர்கள். ஐ.நா. மன்றத்தின் சிறப்பு அதிகாரி மார்ட்டின் செயினன் அவர்கள், “பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் பொழுது, மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்” என்பதை வலியுறுத்துகின்றார். “பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில், அடக்குமுறை ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசியல் எதிரிகளை முடக்குவதற்காக, ஒழித்துக்கட்டுவதற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுகின்றார்கள்” என்கிறார்.
எனவே இந்தக் கடுமையான, அடக்குமுறையான, சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்த மசோதாவை முற்றிலும் நிராகரித்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என இந்த அவையை வேண்டுகிறேன். தவறினால் எதிர்கால இந்திய வரலாற்றில் மக்களால் இந்தச் சட்டம் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும். இவ்வாறு வைகோ பேசியிருந்தார்.