திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தை திறந்து வைக்க வந்த அமைச்சர் கே.என்.நேருவின் காரை மறித்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக்கொடி கட்டியதாக கூறப்பட்டது. இதையடுத்து கே.என்.நேரு ஆதரவாளர்கள் திருச்சி கன்டோன்மெண்டில் உள்ள திருச்சி சிவா வீட்டிற்குச் சென்று கார், பைக் போன்றவற்றை அடித்து உடைத்தனர். இந்த சர்ச்சை திமுகவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசியுள்ளனர்.
திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள இல்லத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறால், நடக்க கூடாதது நடந்து விட்டது. நானும், சிவாவும் மனம் விட்டு பேசினோம் என்றார்.
முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி சிவாவை நேரில் சந்தித்துள்ளேன்.
திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல்வர் என்னை அறிவுறுத்தினார் என்றும் தெரிவித்தார்.
இருவரும் தத்தமது மனதில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம் எனக்கூறிய திருச்சி சிவா, நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என முடிவெடுத்துள்ளதாக கூறினார். நேரு ஆற்றுகிற பணியினை என்னால் ஆற்ற முடியாது. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றுகிறப் பணிகளை அவரால் ஆற்ற முடியாது. ஆனால், இருவரும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே அவரவர் தளத்தில் பணியாற்றுகிறோம் எனத் தெரிவித்தார்.