கோவை – கேரள எல்லைப் பகுதியில் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி சமுதாய நலக் கூடத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் பின் பேறுகால தாய் சேய் மனநலம் பெறுவதற்கான பயிற்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பயிற்சி கையேடு வெளியிடப்பட்டார்.
முன்னதாக சின்கோனா தேசிங் குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் மூலம், நடமாடும் மருத்துவ முகாம், சிறுநீரக பரிசோதனை நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களை பார்வையிட்டார்.நோயாளியிடம் மருத்துவ சிகிச்சைகள் வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை – கேரளா எல்லை பகுதிகளில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொள்ளாச்சி மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.