முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்ததன் மூலமாக 47 ஆண்டுகளாக நிகழாத சாதனையை தமிழ்நாடு அரசு திகழ்த்திக்காட்டியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீர் வளத்தை உறுதி செய்வதும், நீர்நிலைகளைப் போற்றிப் பேணுவதும், அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பதும், நம் தலையாய பணி. ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைத் தூர் வாரியதன் காரணமாகவும், அதிக எண்ணிக்கையில் நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கியதனாலும், பருவமழை நன்றாகப் பொழிந்ததாலும், தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்திருக்கிறது.
முதலமைச்சர் 2021 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதியன்றும், 2022 ஆம் ஆண்டில், 19 நாட்கள் முன்னதாக, மே 24 ஆம் தேதியன்றும் மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததனால், தஞ்சைத் தரணிக்கு தடையில்லாமல் நீர் கிடைத்து, வயல்களெல்லாம் நெல் பயிரினால் பச்சை தொற்றிக்கொண்டு பரவசமடைந்தன.
இதனால், 2022-23 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நிகழ்ந்து, சாதனை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் நிகழாத சாதனை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
நிலத்தடி நீரை முழுமையாகப் பயன்படுத்த மின்சாரம் முக்கியம். கால்வாயில் ஓடிவருகிற நீரை மண்வெட்டி கொண்டு திசைதிருப்பி உழவர்கள் பாய வைக்க முடியும். மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரை வெளிக்கொண்டு வர மின்சார இணைப்புகளின்றி இயலாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி, சாதனை படைத்ததன் விளைவாக, வயல்களில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ந்து வருகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.