ஸ்மார்ட் சிட்டிக்கே இந்த நிலையா? – செல்லூர் ராஜூ நிகழ்ச்சியில் இடிந்து விழுந்த ரவுண்டானா!

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்ட நிகழ்ச்சியில், புதிதாக கட்டப்பட்டிருந்த ரவுண்டான தரைத்தளம் இடிந்து அதில் நின்றிருந்த அதிமுக தொண்டர்கள், கழிவு நீர் தொட்டியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பல ரவுண்டானாக்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில், தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீடு அமைந்துள்ள செல்லூர் பகுதியிலும் ரவுண்டான அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செல்லூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரவுண்டானவை ஆய்வு செய்வதற்காக அமைச்சர், மாநகராட்சி ஆணையர் விசாகன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்றிருந்தனர். கபடி விளையாட்டுக்கு பெயர் போன பகுதி என்பதால், அங்கு கபடி வீரர்களின் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி – செல்லூரில் உடைந்து விழுந்த ரவுண்டானா

அப்போது தொண்டர்களும் அதிமுக நிர்வாகிகளும் புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானாவின் மீது நின்றுக்கொண்டிருந்தனர். சரியான அடித்தளம் இல்லாமல், கழிவு நீர் குழாய்க்கு மேலே கட்டப்பட்டதால் கூட்டத்தினரின் பாரம் தாங்காமல் தரைத்தளம் இடிந்து பள்ளம் ஏற்பட்டது. இதில், கட்சியினர் உள்ளே விழ, பின்பு அருகில் நின்றவர்கள் அவர்களை கையைப்பிடித்து தூக்கி விட்டனர்.

இந்த விபத்தில் பெரிய அளவில் யாருக்கும் ஏற்படவில்லை. அமைச்சர் செல்லூர் ராஜூவும், அதிகாரிகளும் ஆய்வு செய்துகொண்டிருந்த போதே, ரவுண்டானாவின் தரைத்தளம் இடிந்து விழுந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

What do you think?

கொரோனா எச்சரிக்கை; பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

தலைப்பு சிக்கலில் சூர்யாவின் புதிய படம்