சென்னையில் தாழ்தள மாநகர பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
சென்னை மத்திய பணிமனையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 100 பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சுமார் 66.16 கோடி மதிப்பீட்டில் 58தாழ்தள பேருந்துகள், 30 சாதாரண பேருந்துகள், 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 100 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. தி.நகர் – திருப்போரூர், பாரிமுனை – கோவளம், கிளாம்பாக்கம் – கோயம்பேடு , தாம்பரம் – ஆவடி, தாம்பரம் மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் குறைந்தபட்சம் 350 தாழ்தளப் பேருந்துகளை இயக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியிருந்த நிலையில் 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 58 தாழ்தள பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது