எம்.பி. பதவி தகுதி நீக்க தீர்ப்பைக்கு தடை கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனான ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. அவர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கர்நாடக நீதிமன்றத்தில் ஏ.மஞ்சு, தேவராஜ் கவுடா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பிரஜ்வல் ரேவண்ணா முடிவு செய்துள்ளார். அதனால் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி அவர் கர்நாடக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. ஏ.மஞ்சு சார்பில் தீர்ப்புக்கு தடை விதிக்க ஆட்சேபனை இல்லை என்று கூறப்பட்டது.
அதே நேரத்தில் தேவராஜ் கவுடா, தீர்ப்புக்கு தடை விதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அந்த மனு மீதான உத்தரவு பிறப்பிப்பது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இதனால் அவர் மீண்டும் எம்.பி. பதவியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் உச்சநீதிமன்றத்திற்கு சென்று, அங்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவை பெற்றால் தான் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.