பணியாளர்கள் சீருடையில் தாமரை படம்: நாடாளுமன்றத்தை கட்சி அலுவலகம் போல் பா.ஜ.க. நடத்துவது ஏற்கத்தக்கதல்ல- மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி
மதுரை திருப்பரங்குன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் கோவா பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,

நாடாளுமன்றம் புதிதாக கட்டப்பட்டு, இங்கு வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது. அதில் தாமரை சின்னம் பதிக்கப்பட்டுள்ளது. புலி, மயில் சின்னம் பதிக்கப்படவில்லை.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி அல்லவா? தேசிய பறவை மயில் அல்லவா? நாடாளுமன்றத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சீருடையில் தாமரை பதிக்கப்பட்டு இருப்பது பா.ஜ.க.வின் சின்னம். சீருடையில் தாமரை பதிக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. அது வேதனைக்குரியது. நாடாளுமன்றத்தை கட்சி அலுவலகம் போல நடத்துவது என்பது வேதனை அளிக்கிறது.
மன்னிப்புகேட்க வேண்டும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை அண்ணாமலையின் செருப்பை பாதுகாப்பதற்காக பணி அமர்த்தியது வருத்தமாக உள்ளது. இந்திய நாட்டு வீரர்கள் அவமானப்பட்டுள்ளனர்.
இதற்கு அண்ணாமலையும் பா.ஜ.க.வும் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து உள்துறை மந்திரிக்கு உண்மையை தெரிய வைக்க கடிதம் எழுத இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்க: பொய், ஊழல், சதிச் செயல்களை மறைக்கவே திசை திருப்பும் பாஜக… உண்மையை அறியும் நேரம் இது… முதல்வர் கொடுத்த முன்னெச்சரிக்கை..!