தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் CAA எதிர்ப்பு போராட்டம்

சிஏஏவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி சென்னையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மார்ச் 11-ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த தடையை மீறி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் அலையலையாக திரண்டு சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்தப் பேரணியில் இஸ்லாமிய பெண்களும் குழந்தைகளும் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்.

இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர், பிரின்ஸ் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டதால் அவர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 காவல்துறை கட்டுபாட்டு அறையில் இருந்து சிசிடிவிக்கள் மூலமும் காண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பேரிக்கார்டுகள், தடுப்புகளையும் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா சாலை, வாலாஜா சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நேப்பியர் பாலம் வழியாக தலைமைச்செயலகம் வழியே செல்ல கூடிய பேருந்துகள் சிவானந்தா சாலை வழியாக அனுப்பப்பட்டன.

இதேபோல் நெல்லை, மதுரை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டு சிஏஏவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

What do you think?

கொரோனா வைரஸ்; 50 நாட்கள், 2,000 மரணங்கள் – தொடரும் வேதனை. Covid19

பருவநிலை மாற்ற எதிர்ப்பு போராட்டத்துக்கு 71,000 கோடி – அமேசான் அறிவிப்பு