இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

என்.ஆர்.சி., என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் சென்னை குறளகம் அருகே 3,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கையில் பதாகைகளையும் தேசியக்கொடியையும் ஏந்திக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயலாளர் முஹம்மது, “தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு என்.ஆர்.சி, என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதேபோல், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திற்கு பேரணியாக சென்ற இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முஹம்மது அயாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். மேலும், திருவாரூர், வேலூர், திருச்சி மத்திய சிறை, மதுரை தெற்குவாசல், சின்னக்கடை வீதி, நாகை அவுரி திடல் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

What do you think?

இந்தியன் 2 விபத்து – சங்கரிடம் விசாரணை

மாநிலங்களவை தேர்தல் – 6 பேரும் போட்டியின்றி தேர்வு