அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாளத் திரைப்படத்தின் ‘கலக்கத்தா’ பாடலைப் பாடி ரசிகர்களின் இதயங்களை வென்ற பழங்குடியினத்தை சேர்ந்த பாடகி ஆவார். அய்யப்பனும் கோஷியும் படம் வெளியாவதற்கு முன்னரே, இந்த பாடலால் பாடகி நஞ்சியாம்மாள் பிரபலமானார். யூடியூப்பில் வெளியான இந்த பாடலை ஒரு மாதத்தில் 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பார்த்திருந்தனர். இந்தப் பாடலை நஞ்சியம்மாளே எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இவர், கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள அட்டப்பாடி பகுதியிலுள்ள அகழி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் அவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை சிலர் போலியாக பஞ்சாயத்துக்கு வரி கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதையடுத்து, நஞ்சியம்மாள் அகழி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நஞ்சியம்மாளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். நீதிமன்ற வழக்குக் காரணமாக நஞ்சியம்மாளால் தனது நிலத்தில் பயிரிட முடியாத சூழல் காணப்படுகிறது. இந்த நிலம் மட்டும்தான் நஞ்சியம்மாளின் ஒரே வாழ்வாதாரம்.
இதையடுத்து, பாலக்காடு ஆட்சியரை நேற்று சந்தித்து நஞ்சியம்மாள் தனது நிலத்தை மீட்டு தர கோரி மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், \அது என் நிலம். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் உரிமையானது. அந்த நிலத்தில் எனக்கு பிறகு, எனது சந்ததியினர் வாழ வேண்டுமென்பதே எனது ஆசை’ என்கிறார்.
கேரள மாநிலத்தில் அட்டப்பாடி மிகவும் பின்தங்கிய பகுதி ஆகும். கோவையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இந்த பகுதி அமைந்துள்ளது. 745 சதுர கி.மீ பரப்பளவில் அட்டப்பாடி பகுதி அமைந்துள்ளது. புகழ்பெற்ற சைலண்ட் வேலி இங்குதான் அமைந்துள்ளது. இருளர், முதுகா, குறும்பர் இனத்தை சேர்ந்த 33 ஆயிரம் பழங்குடியின மக்கள் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அப்பாவிகளான இந்த மக்களை ஏமாற்றி பலரும் அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பது வாடிக்கையாக உள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான 1000 ஏக்கர் நிலம் இதுவரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, வருவாய்துறை அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் உடைந்தையாக இருக்கிறார்கள். இதனால், அட்டப்பாடி பகுதியே நில மாபியாக்கள் கைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதனால், இரு ஆண்டுகளுக்கு முன்பு அட்டப்பாடி பகுதிக்குள் பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்ற தனி நபர்கள் பழங்குடியின மேம்பாட்டு ஆணையத்திடம் அனுமதி பெறாமல் அட்டப்பாடிக்குள் நுழையக் கூடாது என்று கேரள அரசு தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.