மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு..!! தேவநாதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 முக்கிய புள்ளி..!!
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான “தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்புத் தொகை உள்ள உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் இதில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக இந்த நிதி நிறுவனம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திருப்பிக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில், பாதிப்புக்குள்ளான 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை, தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன இயக்குநர்கள் குணசீலன் புதுக்கோட்டையிலும், மகிமை நாதன் சென்னையிலும் இன்று கைது அதிகாலை செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..