விருந்தினர் மாளிகையில் கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள்..! இவ்வளவு கொள்ளையா..!
விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலையில் உள்ளது தனியார்(ராம்கோ) சிமிண்ட் தொழிற்சாலை. இதன் வளாகத்திற்குள்ளேயே துணை மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் குடியிருப்புகள் உள்ளன.
மேலும், இங்குள்ள விருந்தினர் மாளிகையில் பல்வேறு கட்சி முக்கிய பிரமுகர்கள் தலைவர்கள் தங்குவது வழக்கம். இதனால் ஆலை வளாகத்தைச் சுற்றிலும் 24 மணி நேரமும் ஆலைக் காவலர்கள் தீவிர ரோந்துப் பணியில் இருப்பது வழக்கம்.
மேலும், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. கடந்த ஜூலை 13 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கு தங்கிச் சென்றார்.
இந்நிலையில் ஆலையின் மெக்கானிக் பிரிவு துணை பொது மேலாளராக பணிபுரிந்து வரும் பாலமுருகன் மற்றும் நிர்வாக பிரிவு துணைப் பொது மேலாளரான இராமச்சந்திரன் ஆகியோர் சனிக்கிழமை வெளியூருக்கு சென்றுள்ளனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஆலையைச் சுற்றியுள்ள பலத்த பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, இருவரின் வீட்டின் கதவுகளையும் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
இதில்,பாலமுருகன் வீட்டில் பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 10 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
தகவலறிந்து சம்பவ இடத்தில் விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா விசாரணை நடத்தினார். இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராமச்சந்திர வீட்டில் வாட்ச் உள்ளிட்ட சிறு சிறு பொருட்கள் தவிர வேறு எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. இது குறித்து அவர் புகார் எதுவும் விபரம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்