நீட் தேர்வு முறைகேடு..! பாஜக அரசிற்கு வைகோ கண்டனம்..!
முதுநிலை நீட் தேர்வு நேற்று காலை தொடங்க இருந்த நிலையில் முன்தினம் இரவு 10.30 மணியளவில் திடீரென தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை அறியாமல் புதுக்கோட்டையில் இருந்து ஆந்திரா ராஜமுந்திரிக்கு தேர்வு எழுத சென்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அங்கு சென்ற பிறகே தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுபோன்ற செய்திகளை முன் தினம் இரவு அறிவிப்பது மிகவும் வேதனை அளிக்க கூடிய ஒன்று.., என மாணவர்கள் கேள்வி எழுப்பியதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. நீட் தேர்வு முறைகேடுகளால் தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது உரிய திட்டமிடல் இன்றி மாணவர்களை அலைக்கழித்த பாஜக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதை வைகோ சுட்டிக்காட்டி உள்ளார். நடப்பு 2024-ஆம் ஆண்டு 23.33 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், 13.16 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றதாகவும் இதில் தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களைச் சேர்ந்த 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள், அதாவது 720-க்கும் 720 மதிப்பெண்கள் எடுத்திருந்தை வைகோ சுட்டிகாட்டி உள்ளார்
மேலும் இதுவரை இல்லாத வகையில் 67 பேர் எப்படி முழு மதிப்பெண்கள் எடுத்தனர் எனவும் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். அரியாணா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஆறு மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும் இதுவும் வழக்கத்துக்கு மாறானது என்று ஐயம் எழுந்துள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்
ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் இந்த முறைகேடுகளால் தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என முதலில் ஒன்றிய அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள வைகோ, ஆனால் பிறகு ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு ஜூன் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்ததாகவும் வினாத்தாள் கசிவு, முறைகேடு வழக்கின் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளதையும் வைகோ சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒன்றிய அரசின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளின் தொடர்ச்சியாக ஜூன் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக சனிக்கிழமை இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட்டதையும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 297 நகரங்களில் நடைபெற இருந்த தேர்வில் 2,28,757 மாணவர்கள் கலந்து கொள்ள தயார் நிலையில் இருந்ததாகவும் ஆனால் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் ஒன்றிய பாஜக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் மட்டும் எழுப்பப்பட்டக் குரல் தற்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்க தொடங்கியிருப்பதாகவும் இதனைப் புரிந்து கொண்டு ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..