பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் குடித்தவர்கள் 50கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இழப்பீடு வழங்க முடியாது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பீஹார் மாநிலத்தில் கடந்த 2016 முதல் மதுவை விற்கவும் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த மாநிலத்தில் கள்ளச்சாராய கலாச்சாரம் அதிகமாக இருப்பதனால் அங்கு அடிக்கடி கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்து வரும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமை அன்று சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 50ஐ எட்டியது. இதனால் அந்த மாநிலத்தின் அரசியலில் பெரும் புயலே உருவாகியுள்ளது.
அந்த மாநில சட்டப்பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை கேட்டு வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதிலளித்த அம்மாநில முதல்வர், கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது, கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும். மதுவுக்கு ஆதரவாக பேசுபவர்களால் அவர்களுக்கு எந்த நல்லதும் நடக்காது என்று கூறியுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்களில் இதுவரை 126 பேரை கைது செய்துள்ளதாக பிஹார் போலீசார் தெரிவித்துள்ளனர்.