நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் இன்று காவல்நிலையத்தில் ஆஜராகாமல் செவ்வாய்கிழமை ஆஜராவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது புகார் அளித்த நிலையில், சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் சம்மன் நேற்று இரவு அனுப்பியுள்ளனர்.
வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் சாலையில் உள்ள ஆர்-9 காவல் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வெளியூர் செல்லவேண்டி இருப்பதால் வருகிற செவ்வாய்க்கிழமை(செப். 12) ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.