ஜம்மு காஷ்மீரில் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பதான்மஹால் என்ற கிராமத்தில் வசிக்கும் ரஜியா சுல்தானாவை பாகிஸ்தானுக்கு செல்லும்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டடுள்ளது. இது, அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் அட்டை எல்லாம் இருந்தும் அவரை இந்தியாவில் இருந்து வெளியேற சொல்வது நியாயமே இல்லாதது என அவரின் மகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ரஜியா சுல்தானாவின் மகன் கூறியுள்ளதாவது,’ தற்போது எனது தாய்க்கு 72 வயதாகிறது. கல்லீரல் பிரச்னை, சிறுநீரக பிரச்னை உள்ளது. நோயுற்ற அவரை தேவையில்லாமல் மன உளைச்சளுக்கு உள்ளாக்குகிறார்கள். எனது தாய்க்கு பாகிஸ்தானில் யாரும் கிடையாது. அவர், இந்திய குடிமகளாகதான் வாழ்கிறார். அதற்கு , தேவையான அத்தனை ஆவணங்களும் அவரிடத்தில் உள்ளது. அப்படியென்றால், இந்த ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும் போதே அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கலாமே? ‘என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜியாவின் தந்தை ஹைதர் அலி பீகார் மற்றும் கொல்கத்தாவில் வாழ்ந்துள்ளார். கொல்கத்தாவில் ரஜியா பிறந்துள்ளார். பின்னர், பதன்மகாலை சேர்ந்த சம்சுதீனை மணந்துள்ளார். தற்போது, சம்சுதீன் உயிருடன் இல்லை. அதே வேளையில், ரஜியாவின் தந்தை பின்னர் வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் வாழ்ந்துள்ளார். தொடர்ந்து, பாகிஸ்தான் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்துள்ளார். இதன் காரணமாக , ரஜியாவை இந்தியாவை விட்டு வெளியேற ஒடிசா நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அவரிடத்தில் பாகிஸ்தான் தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.