ஆக்கிரமிப்பு நிலத்தை இடித்த அதிகாரிகள்.. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.. ஆட்சியரின் அதிரடி உத்தரவு..!
கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வழி ஊராட்சி நேதாஜி நகரைச் சோ்ந்தவர் ராஜ்குமாா். எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்து வரும் இவர் தனது தாய் மற்றும் 4 வயது மகளுடன் குடிசை வீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக சொல்லபடுகிறது.
இந்த சூழலில் ராஜ்குமார் தனது வீடு பட்டா நிலத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். எனினும் அவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறையினர் நேற்று 30-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்போடு ராஜ்குமாரின் வீட்டை இடிக்க வீட்டை இடிக்க முயன்றனர்.
அப்போது அவா் ஒரு வாரம் காலஅவகாசம் வேண்டுமெனவும் மாற்றிடம் ஏற்பாடு செய்து தானே வீட்டில் இருந்து பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியேறுவதாக கூறினாா்.
அதற்கு வருவாய்த் துறையினா் ஒப்புக் கொள்ளாமல் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட முயன்ற போது மனமுடைந்த அவர் வீட்டுக்குள் சென்று மண்ணெணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனடியாக காவல்துறையினா் முன்னெச்சரிக்கையாக வைத்திருந்த தீயணைப்பு கருவி மூலம் ராஜ்குமாா் உடலில் பற்றிய தீயை அணைத்தனா்.
பின்னர் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, விஏஓ பாக்கியஷர்மா பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பிரபுசங்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்