ஜம்மு காஷ்மீரின் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் முதல் இந்தியாவின் தெற்கு எல்லையில் பெண் எடுத்திருக்கும் பாகிஸ்தானியர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜா கோபால். இவர், ஷார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, பாகிஸ்தானின் முல்தான் நகரை சேர்ந்த தைமுர் தாரிக் என்பவருக்கும் ஸ்ரீஜாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்ய கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக வீட்டில் சம்மதத்தை பெற போராடியுள்ளனர். கடைசியில் கடந்த 2018ம் ஆண்டு இருவருக்கும் கோட்டயத்தில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, தாரிக் துபாயில் மரக்கடை நடத்தி வருகிறார்.
கோட்டயத்தில் ஸ்ரீஜா வசித்து வருகிறார். மனைவியை பார்க்க அடிக்கடி கோட்டயத்துக்கு தாரிக் வருவது வழக்கம் . இந்த தம்பதிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு , பெண் குழந்தை பிறந்தது. இதுவரை, குழந்தையை நேரில் பார்க்கும் வாய்ப்பு தாரிக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில்,குழந்தையை பார்க்க 45 நாட்கள் விசாவில் இந்தியாவுக்கு வர தாரிக் திட்டமிட்டிருந்தார். ஏப்ரல் 25 ம் தேதி இந்தியாவுக்கு வர டிக்கெட்டும் எடுத்திருந்தார். கோட்டயத்தில் தனது மைத்துனர் திருமணத்திலும் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்குள் ஏப்ரல் 22ம் தேதி பஹால்கம் தாக்குதல் நடந்து விட, இந்திய அரசு பாகிஸ்தானியர்களின் விசாக்களை ரத்து செய்து விடுவதாக அறிவித்து விட்டது. இதனால், தாரிக்கால் இந்தியா வர முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. முதல் முறையாக குழந்தையை பார்க்கும் ஆசையில் இருந்தவரின் கனவில் தீவிரவாதிகள் மண்ணை அள்ளி போட்டு விட்டனர்.
இது குறித்து தைமுர் தாரிக் கூறுகையில், பஹால்காமில் நடந்த சம்பவம் எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. எனக்கு இரு நாட்டிலும் குடும்பத்தினர் உள்ளனர். இந்த பிரச்னைகள் தீர்ந்து எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டுமென்பதே எனது ஆசை. எனக்கு வருங்காலத்தில் கோட்டயத்தில் செட்டில் ஆகி விட வேண்டுமென்பதுதான் கனவு. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டயத்தில் வீடு வாங்கி , தைமுர் மன்ஸில் என்று பெயர் வைது எனது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளேன்.
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸட் மாததில் கோட்டயம் வந்த போது, ஆகஸ்ட் 15ம் ஆண்டு எங்கள் வீட்டில் கேக் வெட்டி சுதந்திர தினத்தை கொண்டாடினோம். இந்த நினைவுகள் எல்லாம் எனக்குள் பசுமையாக இருக்கிறது. தற்போது, என்னிடத்தில் வேலிட் விசா உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையும் எனது விசாவை ரத்து செய்ததாக எந்த தகவலும் வரவில்லை. எனினும், இந்த சூழலில் நான் அங்கு வருவது சரியாக இருக்காது’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு 4 முறை தைமுர் தாரிக் இந்தியா வந்து சென்றுள்ளார். அப்போதெல்லாம், அவருக்கு எந்த பிரச்னையும் எழுந்தது இல்லை. தனது கணவரின் நிலை குறித்து ஸ்ரீஜா கோபால் கூறுகையில், மதத்தை கடந்துதான் திருமணம் செய்தோம். பெயர் மாற்றமோ மத மாற்றமோ செய்யவில்லை. ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக் கொண்டோம். எங்கள் வாழ்க்கையில் பல இக்கட்டான சூழலை கடந்து வந்துள்ளோம். அதே போன்று இந்த இக்கட்டான சூழலையும் கடந்து விடுவோம்’ என்று நம்புகிறார்.
திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகி விட்டாலும் ஒரு முறை கூட ஸ்ரீஜா பாகிஸ்தான் சென்றதில்லை. ஆனால், பாகிஸ்தானிலுள்ள தனது மாமியார் ஷபானாவுடன் போனில் பேசுவதை ஸ்ரீஜா வழக்கமாக வைத்துள்ளார். தனது கணவரின் குடும்ப உறுப்பினர்களை ஷார்ஜாவில் வைத்து ஸ்ரீஜா சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.