பெகாசஸ் உளவு மென்பொருளை ரூ.25 கோடி ரூபாய்க்கு மேற்கு வங்க அரசுக்கு விற்க முயன்றதாக திடுக்கிடும் தகவலை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டார் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனிடையே, பெகாஸஸ் மென்பொருளை 2016-இல் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றது முதலாக மம்தா பானர்ஜி பயன்படுத்தி வருவதாக பாஜக மூத்த தலைவர் அநிர்பான் கங்குலி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களின் சந்திப்பில் மம்தா பானர்ஜியிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
பெகாசஸ் உளவு மென்பொருளை எனது அரசு பயன்படுத்தியதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். அவர்களிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறதா? தங்கள் மீதான தவறை மறைக்க அவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், உண்மையில், பெகாசஸ் மென்பொருளை மேற்கு வங்க காவல்துறைக்கு விற்க இஸ்ரேல் நிறுவனம் முயற்சித்தது. அதற்கு ரூ.25 கோடியும் விலை பேசப்பட்டது.இந்த தகவல் எனக்கு தெரியவந்ததும், உடனடியாக அதனை நிராகரித்தேன்.
மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதிலும், கருத்துரிமையை நசுக்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான், அந்த மென்பொருளை வாங்குவதை தவிர்த்தேன்.
ஆனால், ஒவ்வொரு மாநிலத்தையும் அந்நிறுவனம் தொடர்பு கொண்டதாகவும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது பெகாசஸ் வாங்கப்பட்டதாகவும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.