விடாமுயற்சி விஸ்ரூப வெற்றி.. கூலித் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் வென்ற கதை..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தங்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருக்கு, சுதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில், மூத்த மகளான லட்சுமி, மருத்துவராக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கண்டுள்ளார்.
ஆனால், 12-ஆம் வகுப்புக்கு பிறகு, திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்த நிலையில், தனது மருத்துவ கனவு குறித்து, அவர் தெரிவித்துள்ளார். பெரிய போராட்டத்திற்கு பிறகு, நீட் தேர்வு எழுதுவதற்கு, அவரது பெற்றோர் சம்மதித்துள்ளனர்.
இதையடுத்து, தேர்வுக்காக தயாரான லட்சுமி, 15 மதிப்பெண் வித்தியாசத்தில், மருத்துவ கனவை அடைய முடியாத நிலைக்கு சென்றார். அதாவது, 369 மதிப்பெண்கள் பெறுவதற்கு பதிலாக, 354 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், அவருக்கு இருக்கை கிடைக்கவில்லை.
இதனால், மனம் தளர்ந்த லட்சுமியின் தந்தை, மீண்டும் திருமணம் தொடர்பான பேச்சை எழுப்பியுள்ளார். ஆனால், படிக்கும் வேண்டும் என்ற தன்னுடைய ஆசை தான் நிறைவேறவில்லை. தனது மகளின் ஆசையாவது நிறைவேறட்டும் என்ற எண்ணத்தில், லட்சுமியை, அவரது தாய் மீண்டும் நீட் தேர்வு எழுது அனுமதித்துள்ளார்.
இந்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், 555 மதிப்பெண்கள் பெற்று, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிக்க இருக்கையை பெற்றுவிட்டார். முயன்றால், அனைத்தும் முடியும் என்ற சொல்லாடலுக்கு உயிர் கொடுக்கும் விதமாக, கூலித் தொழிலாளியின் மகள், நீட் தேர்வில் வென்றிருப்பது, போராட துடிக்கும் பலருக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.
-பவானி கார்த்திக்