இந்தியக் கிரிக்கெட் அணி, ஆசியக்கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்தத் தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிதான் அணிகள் மோதுகின்றன. இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி வரும் ஞாயிறு அன்ரு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரர், விராட் கோலி. இவர், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் நூறு சதங்கள் என்கிற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்த ஆசியக் கோப்பையிலாவது விராட் கோலி சதமடிப்பார் என, ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து வருகின்றனர். ஓய்வில்லாமல் விளையாடுவதால் அவர் தடுமாறுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிசிசிஐ அவருக்கு போதிய ஓய்வை அளித்துள்ளது.
இந்நிலையில், விராட் கோலி கிரிக்கெட் வாழ்க்கையில், 14 ஆண்டுகாலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், “என்னுடைய வாழ்வின் மகிழ்ச்சியான காலக்கட்டம் என்பது தோனியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியதுதான். அவரின் நம்பிக்கைக்குரியவனாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். எங்களுடைய பார்ட்னர்ஷிப் என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ள அவர், 7 + 18 என இருவரின் ஜெர்சி எண்களையும், கடைசியில் குறிப்பிட்டு உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டுள்ளார். இதனை தோனி மற்றும் கோலியின் ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.