அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்களது நாட்டின் கொள்கை என பிரதமர் மோடு ஜி20 மாநாட்டில் உரையாற்றி உள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைப்பெறும் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 உச்சி மாநாடு இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தியா தலைமை தாங்கி நடத்தி வரும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றன.
இந்நிலையில் மாநாட்டை தலைமையேற்று நடத்தி வரும் பிரதமர் மோடி அனைவரின் முன்பும் உரையாற்றி வருகிறார். அவர் பேசியதாவது,
போரினால் உலகளவில் இழந்துள்ள நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்டவற்றுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்.
அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்களது நாட்டின் கொள்கை .வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி-20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் பாரத் என பொறிக்கப்பட்டுள்ள பலகை முன் பிரதமர் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.