மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னின் செல்வன் பாகம் -1’ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னின் செல்வன் பாகம் -1’ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து வருகிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது.
இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
2 பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் 2 பாக ஷூட்டிங்கும் மொத்தமாக முடிந்துவிட்டது. தற்போது முதல் பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக ‘பொன்னின் செல்வன் பாகம் -1’ 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று(மார்ச்.02) படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ‘பொன்னின் செல்வன் பாகம் -1’ வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதளபக்கங்களில் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான முதல் பார்வையும் வெளியிடப்பட்டுள்ளது.