February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா

“ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்?” – ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி

டெல்லியில் ஆம் ஆத்மியின் வெற்றியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டியதை, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதோடு, 63 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இருந்தாலும், ஆம் ஆத்மியின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ”ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள், பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பா.ஜ.கவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி வெற்றியை ப.சிதம்பரம் பாராட்டியுள்ளதை குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும், டெல்லி மகிளா காங்கிரஸ் தலைவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி விமர்சித்துள்ளார். ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவினை ரீட்விட் செய்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் பொறுப்பை நாம் ஆம் ஆத்மி கட்சிக்கு விட்டுக் கொடுத்து விட்டோமா? அப்படியில்லை என்றால், நம்முடைய படுதோல்வி குறித்து கவலைப்படுவதற்கு பதிலாக, ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்?” என ஷர்மிஸ்தா கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படியே பிராந்தியக் கட்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் பொறுப்பைக் கொடுத்து விட்டால், மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தங்களுடைய கடையை இழுத்து மூடி விடலாமா? என்றும் அவர் காட்டமாக கேட்டுள்ளார். டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாத நிலையில், ப.சிதம்பரத்தை, ஷர்மிஸ்தா முகர்ஜி விமர்சித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related posts

மத்திய அரசுக்கு 10,000 கோடி செலுத்திய ஏர்டெல்!

Digital Team

வேளாண் பாதுகாப்பு மண்டலம்: விளக்கம் கேட்கும் வைகோ

Digital Team

காங்கிரஸுக்கு மாஸ்டர் ஆகிறாரா விஜய்?

Digital Team

காவலர் தேர்விலும் முறைகேடு?

Digital Team

சோதனை நல்லது! – அஜித் வழியில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Digital Team

பருவநிலை மாற்ற எதிர்ப்பு போராட்டத்துக்கு 71,000 கோடி – அமேசான் அறிவிப்பு

Digital Team
You cannot copy content of this page
Madhimugam