பாகப்பிரிவினையில் பிரச்சனை…வீட்டை அடித்து நொறுக்கிய இரண்டாவது தாரத்து மகன்…!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
பார்மா நிறுவனம் நடத்தி வரும் முதல் மனைவியின் மகன் கோபிநாத் மயிலாடுதுறை சேந்தங்குடி எம்.ஆர்.ஆர். நகரில் புதிதாக வீடுகட்டி வசித்து வருகிறார்.
இரண்டாவது மனைவிக்கு அசோக்குமார் வினோத்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
தட்சிணாமூர்த்தி 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மல்லியம் கிராமத்தில் உள்ள ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக இருதாரத்தின் மகன்களுக்கும் இடையே குடும்ப பிரச்சினை நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட மெடிக்கல் ஷாப் பணிக்காக குடும்பத்துடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோபிநாத் சென்ற நிலையில் இன்று கோபிநாத்தை வாட்சப் மூலம் தொடர்பு கொண்ட அசோக்குமார் தரப்பினர் சொத்தை பிரித்து எழுதி தராததால் உனது வீட்டை உடைத்து நாசமாக்கி விட்டோம் என்றும் இனி எப்படி நீ நிம்மதியாக இருக்கிறாய் என்று பார்க்கிறேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கோபிநாத் காவல்துறை அவசர உதவி எண் 100க்கு போன் செய்துள்ளார். தொடர்ந்து கோபிநாத்தின் மனைவி உஷா மகளுடன் உடனடியாக அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு இரவு மயிலாடுதுறை வந்து சேர்ந்தனர்.
அப்போது வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.
தொடாந்து செய்தியாளர்களிடம் கூறிய உஷா பாகப்பிரிவினை செய்து தராததால் வீட்டின் கண்ணாடி கதவுகளையும், எல்இடி டிவியையும் அடித்து உடைத்து வீட்டை சேதப்படுத்தி பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை ரூபாய் 4,80,000 ரொக்கம் வெள்ளி குத்துவிளக்கு, சொத்து பத்திரம் ஆகியவற்றை அசோக்குமார் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதாக கூறி கதறி அழுதார்.
வீட்டை உடைப்பதற்காக அசோக்குமார் தரப்பினர் தெருவுக்குள் புகுந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவில் பதிவாகி இருக்கும் என்றும் அதன் அடிப்படையில் உரிய விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்