புதுச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாய், தந்தை மீது தீவைத்து கொளுத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த திருகாஞ்சி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(67). இவரது மனைவி லதா. இந்த நிலையில் இன்று இரவு வீட்டில் தீ காயங்களுடன் 2 பேரும் உயிருக்கு போராடுவதாக, மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில் விரைந்து சென்ற இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் லதா பரிதாபமாக இறந்தார். தட்சிணாமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தட்சிணாமூர்த்தி-லதா தம்பதியினரின் மனநிலை பாதிக்கப்பட்ட மகன் புகழ், இருவர் மீதும் தீ வைத்து கொளுத்தி இருப்பதும், 5 வருடமாக மனநிலை பாதிக்கப்பட்ட புகழ், பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
பெற்றோரை கொளுத்தி விட்டு, உறவினர் வீட்டிற்கு சாப்பிட சென்ற புகழை கைது செய்து, காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.