சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, சென்னையில் பருவ மழைக்காலங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ‘சிங்கார சென்னை 2.0′ திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை உடனடியாக தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட செனடாப் சாலையில் சுமார் 2.14 கோடி மதிப்பீட்டில், 870 மீட்டர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நேற்று(மார்ச்.23) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.