இராஜா முத்தையா பெயரை நீக்க வைகோ எதிர்ப்பு…!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது என தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, புதிய மருத்துவக் கல்லூரியை கடலூரில் தான் தொடங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளுள் ஒன்றான, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், செட்டிநாட்டு அரசர் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், லட்சக்கணக்கான மாணவர்களைப் பயிற்றுவித்தாக தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து,  உலக அளவில் தமிழகத்திற்கு மதிப்பைத் தேடித்தந்த கல்விக்குழுமம் என்றும் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை அழைத்துப் பேச வைத்துப் பெருமை சேர்த்து, மாணவர்கள் இடையே பகுத்தறிவுக் கொள்கைகள் வேர் ஊன்றச் செய்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தான் என்றால் அது மிகை ஆகாது என வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகதத்தில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய பல சொற்பொழிவுகள்தான், மாணவர்கள் இடையே அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது, மொழி உணர்வை விதைத்தது, மொழிப்பற்றை வளர்த்தது என வைகோ தெரிவித்துள்ளார்.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் களம் அமைத்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என வைகோ நினைவுகூர்ந்துள்ளார். தமிழ் மொழியையும், தமிழ் இசையையும் வளர்ப்பதற்கு, அண்ணாமலை அரசரைப் போல் ஆதரவு அளித்தவர்கள் எவரும் இல்லை என தெரிவித்துள்ள அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள்தான், இன்றைக்குத் தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக, பல்துறை விற்பன்னர்களாக மிளிர்கின்றார்கள் எனக் கூறியுள்ளார். 

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேம்படுவதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெருந்துணையாக இருந்ததாக வைகோ கூறியுள்ளார்.

ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ராஜா சர் முத்தையா பெயரில் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப் போவதாக,  சட்டப்பேரவையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, திருச்சியில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி என்ற பெயர்களில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பது போல், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதற்கு மாறாக, செட்டிநாட்டு அரசரின் பெயரையும், புகழையும் மறைகிற வகையில் ராஜா முத்தையா அவர்களின் பெயரை நீக்கினால், மதிமுக சார்பில் சிதம்பரத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். 

மேலும், கடலூர் மாவட்டத்திற்கான புதிய மருத்துவக் கல்லூரியை, மாவட்டத் தலைநகரான  கடலூரில்தான் தொடங்க வேண்டும் என்றும், அதன்மூலம், கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்

What do you think?

மாமல்லபுரத்தில் நடைபெற்ற அமெச்சூர் ஆணழகன் போட்டி…!

மாணவர்களிடம் ஆசிரியர்கள் நேர்மையை விதைக்க வேண்டும் – சகாயம் ஐ.ஏ.எஸ்